திருச்சி ஸ்ரீ அம்மன் சிலம்பக்கூடம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம் சிறுவர் சிறுமியரின் சிலம்பாட்டத்தால் களைகட்டியது.
பொங்கல் திருவிழாவில் சிறுவர் சிறுமியர் சிலம்பாட்டம் களை கட்டியது.
திருச்சி தாரா நல்லூர் விஸ்வாஸ் நகர், ஏ.பி.நகரில் ஸ்ரீ அம்மன் சிலம்பக் கூடம் செயல்பட்டு வருகிறது. கடந்த 47 வருடங்களாக பல்வேறு சாதனையாளர்களை இச்சிலம்ப பள்ளி உருவாக்கியுள்ளது. சிலம்ப ஆசான் முத்துகிருஷ்ணன் இங்கு தினமும் 120 சிறுவர் சிறுமியர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் சுகுமாறன் தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமச்சந்திரன், ஹீடு இந்தியா கங்காரு கருணை இல்ல செயல் இயக்குனர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட சிலம்ப விளையாட்டு கழக பொருளாளர் ராஜசேகர், காவல்துறை உதவி ஆய்வாளர் சண்முகப்பிரியா, நிர்வாகிகள் ரகுநாதன், பத்மபிரியா, பொருளாளர் கோபாலகிருஷ்ணன், அம்மன் சிலம்பக் கூட பயிற்சியாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் சிலம்பாட்ட பள்ளி மாணவ மாணவிகள் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். இளைஞர்களும் சிலம்பப் போட்டியில் பங்கேற்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் மாணவ-மாணவிகள், பெற்றோர் பலர் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் பானை உடைத்தல் போட்டி, பறை இசை உள்ளிட்டவை நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். சிலம்ப பயிற்சியாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.