திருச்சியில் சாலைப் பணியாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் …
திருச்சி: 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க கோரி சாலைப்பணியாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சாலைப்பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலை பணியாளர்களை திறன்மிகு இல்லா ஊழியர்களாக அறிவித்து தர ஊதியம் 1,900 ரூபாய் என மாற்றி அமைக்க வேண்டும். அரசு பணியிடங்களை ஒழித்திட வகைசெய்யும் பணியாளர் சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும். சீருடை சலவை படி, விபத்து படி, சைக்கிள் படி வழங்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்கள் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் சரவணன், நாகராஜ், செங்குட்டுவன், சட்டையப்பன், திருச்சி மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். திருச்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ரவி, துறையூர் வட்ட செயலாளர் சரவணன், லால்குடி வட்ட பொருளாளர் அய்யனார் உள்ளிட்ட ஏராளமான சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சுவராசுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை சங்க நிர்வாகிகள் அளித்தனர்.