சம வேலைக்கு சம ஊதியம் கோரி திருச்சியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி:
சம வேலைக்கு சம ஊதியம் கோரி திருச்சியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு எம்ஆர்பி (மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம்) செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் திருச்சி மாவட்ட கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலையரசி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை சங்க துணைத்தலைவர் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்யும் எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களை போல் ஊதியம் மற்றும் பலன்கள் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களையும் காலமுறை ஊதிய வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு சம ஊதியம் 6 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த செவிலியர்களுக்கு கொடுக்கும் விடுப்பு மற்றும் அதற்கான பலன்களும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க இணைச் செயலாளர் ராஜேஸ்வரி, பொருளாளர் மார்கிரேட் உள்பட ஏராளமான செவிலியர்கள் சீருடையுடன் கலந்து கொண்டனர்.