ஆத்தூரில் பா.ம.க., சார்பில் அறவழிப் போராட்டம்
சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐந்தாம் கட்ட அறவழிப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர், வன்னிய சமுதாய மக்கள் ஒன்றிணைந்து, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, ஆத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று, நகராட்சி ஆணையாளர் திருமதி ஸ்ரீதேவி அவர்களிடம் கோரிக்கைை மனுக்களை வழங்கினர். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் பி.என்.குணசேகரன் தலைமை தாங்கினார். மேலும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பி.நடராஜன், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் இரா.கண்ணன் நாயுடு, ஆத்தூர் நகர செயலாளர் மணிகண்டன் நாயக்கர், உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் வன்னிய சமுதாய மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.