அதிக அளவில் முத்தரையர் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிக்கு ஆதரவு சிங்க முத்தரையர் முன்னேற்ற சங்கம் அறிவிப்பு
திருச்சி: சட்டமன்ற தேர்தலில் அதிக அளவில் முத்தரையர் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என்று எங்க முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் ராஜீவ் காந்தி கூறினார். சிங்க முத்தரையர் முன்னேற்ற சங்க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க நிறுவனத் தலைவர் ராஜீவ் காந்தி தலைமை வகித்தார். மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த திமுக மாவட்ட கவுன்சிலர் பாலா, மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் அரியூர் மாதவன். விழிதியூர் திருச்செல்வம். மாவட்ட இளைஞர் அணியைச் சேர்ந்த நாசர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் நிறுவனத் தலைவர் ராஜீவ் காந்தி தலைமையில் திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ராஜீவ்காந்தி செய்தியாளரிடம் விளக்கி கூறியதாவது;
சிங்க முத்தரையர் முன்னேற்ற சங்க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்டது முத்தரையர் சமுதாயம் அதனால் இந்த சமுதாயத்தை எம்பிசி பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிக வாக்கு வங்கி கொண்ட சமுதாயமாக முத்தரையர் சமுதாயம் உள்ளது. அதனால் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக முத்தரையர் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யப்படும். மேலும் எங்களுக்கு ராஜ்யசபா சீட் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கப்படும்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 43 வருடங்களாக முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தாமல் திமுக புறக்கணித்து வருகிறது. தொடர்ந்து இந்த முறையும் திமுக புறக்கணித்தால் முத்தரையர் சமுதாயம் திமுகவை புறக்கணிக்கும். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கிளிக்கூடு- கல்லணை இடையிலான பாலத்தை அமைத்துக் கொடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக அளவில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்த கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Attachments area