திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு சமீபத்தில் 3 புதிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் இன்று திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட பொதுச்செயலாளர் நியமித்துல்லா, மாவட்ட செயலாளர் முபாரக், மாவட்ட பொருளாளர் காதர், செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் மஜீத், தளபதி அப்பாஸ் முகமது சுகைப், மீரான் ஜவஹர் அலி, விவசாய அணி தலைவர் சகாபுதீன், வர்த்தக அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக், எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா, சுற்றுச்சூழல் அணித்தலைவர் ரகமத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின்போது மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.