சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 26வது நாளாக போராட்டம். அதிக கல்விக் கட்டணத்தை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அதற்கான அரசாணை இதுவரை பிறப்பிக்கப்படாததால் தொடர்ச்சியாக மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தனியார் கல்லூரிகளின் கட்டணத்தை விட பல மடங்கு அதிகம். இந்த கட்டண விகிதத்தை கண்டித்தும், அரசு கட்டணம் வசூலிக்க கோரியும் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று மாணவர்களின் போராட்டம் 26வது நாளாக நீடித்தது. இன்றைய போராட்டத்தை ஒரு அடையாள உண்ணாவிரதப் போராட்டமாக நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
போராட்டம் துவங்கி 26ஆவது நாளான இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டமாக நடத்தப்பட்டு வருவதாகவும், இரவு முழுவதும் மருத்துவமனையில் பணியில் இருந்துவிட்டு தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறினர். தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் என்றும், தங்களது ஒற்றை கோரிக்கையான அரசுக் கல்லூரியில் அரசு கட்டணம் என்ற தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாகவும் மருத்துவ மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.