டிசம்பர் மாதத்தில் மகிழ்ச்சியான செய்தி வரும்..டிடிவி தினகரன் நம்பிக்கை!
![]()
எனக்கும் பழனிசாமிக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 11 அதிமுக -வும் பாஜக -வும் தங்களின் கூட்டணியை உறுதி செய்தன. ஆனால் கூட்டணி வைத்த நாளிலிருந்தே அதிமுக -பாஜக கூட்டணி அடிமட்ட அளவில் ஒன்றிணையவில்லை என்ற கூற்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் சரிசெய்து இப்போதுதான் இரு கட்சிகளும் தங்களின் ஒற்றுமையை உறுதி செய்து வருகின்றனர்.
இத்தகு பரபரப்பான சூழலில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்தார். அவர் அமித்ஷாவை சந்தித்து வந்ததே பெரும் பேசுபொருளாக மாறியது. அதற்கு காரணம், எடப்பாடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் தனிமையில் உரையாடலை நடத்தினார். பிறகு வெளியில் வந்த எடப்பாடி செய்தியாளர்களை சந்திக்காமல் முகத்தை கைக்குட்டையை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டதாக பல தகவல் வெளியாகின.
நேற்று நடந்த கரூர் கூட்டத்தில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் “முழுவதும் நனைந்த பிறகு’ முக்காடு எதற்கு என கடுமையாக விமர்சித்திருந்தார். அதுமட்டுமின்றி டிடிவி தினகரனும் “முகமூடி எடப்பாடியார்” என கலாய்த்து தள்ளியிருந்தார்.
இந்தநிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 10 ஆண்டுகளில் நான் யாருடனும் தொடர்பில் இல்லை. பாஜகவின் பாதுகாப்பில்தான் எடப்பாடி பழனிசாமி இருந்தார். பழனிசாமி முகம் வாடியுள்ளது. அவரை விட்டு விடுங்கள். பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அவரை ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போக மாட்டோம்.
பழனிசாமிக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை இல்லை. எடப்பாடி பழனிசாமியை நாங்கள்தான் முதல் அமைச்சர் ஆக்கினோம். அண்ணாமலையும் நானும் டெல்லி செல்வதாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் மகிழ்ச்சியான செய்தி வரும். அண்ணாமலையும் நானும் தினமும் உரையாடுவோம். அண்ணாமலை குணத்துக்கும் என் குணத்துக்கும் நிறைய ஒத்துப்போகின்றன” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

